கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - 41 பேர் கைது

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியினர் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-07 22:45 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் மற்றும் சோலைத்தேவன்பட்டி கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சோலைத்தேவன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மலம் கொட்டும் நூதன போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபடாமல், ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்