மத்திய அரசை கண்டித்து மாணவர் காங்கிரசார் நூதன போராட்டம்

மத்திய அரசை கண்டித்து மாணவர் காங்கிரசார் நேற்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-07 22:00 GMT
புதுச்சேரி, 

புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் விக்ரமாதித்தன், சண்முகபிரியன், தமிழழகன், பொதுச்செயலாளர் தரணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காததால் ஷூவுக்கு பாலிஷ் போடுவது போலவும், மண்வெட்டியால் நிலத்தை வெட்டுவது போலவும் நடித்துக்காட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போதே அவர்கள் திடீரென எழுத்து கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கத்தில் அங்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்