நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

Update: 2019-03-07 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு பதிவு செய்த 1 லட்சத்து 52 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்குவதற்காக, விவசாயிகள் பல முறை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதை அடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்றுத் தரும் நோக்கத்துடன் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்துடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

தற்போது, முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 42 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் வழங்கி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இந்த தொகை உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் உறுதியளித்துஉள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 131 கோடியே 92 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 175 கோடி ரூபாய் அளவுக்கு 12.3.2019-க்குள் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும்.

மூன்றாம் கட்டமாக மீதமுள்ள பகுதிகளில், இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து, புதுடெல்லியில், மத்திய வேளாண் அமைச்சகம் தலைமையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தொலை உணர்வு துறை அலுவலர்கள் அடங்கிய குழு இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு 15.3.2019-க்குள் மீதமுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தை அரசு வலியுறுத்தியுள்ளது. அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக விரைவில் நெற்பயிரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டுத் தொகை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்