சேலத்தில் போலீஸ் எனக்கூறி விடுதியில் தங்க அறைகேட்ட 2 டிரைவர்கள் கைது

சேலத்தில் போலீஸ் என கூறி விடுதியில் தங்க அறைகேட்ட டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-08 22:45 GMT

சேலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நேற்று அதிகாலை 2 பேர் வந்து, நாங்கள் இருவரும் சேலத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகிறோம். எனவே நாங்கள் தங்குவதற்கு அறை வேண்டும், என்று கேட்டனர். 2 பேரையும் பார்த்த விடுதி பணியாளர் முத்துசாமி சந்தேகம் அடைந்தார். பின்னர் 2 பேரிடம் அடையாள அட்டையை கேட்டு உள்ளார்.

இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது வரவேற்பு அறையில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுகுறித்து முத்துசாமி பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்ததும் தகராறில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரிசிபாளையத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 28), நஞ்சம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (44) என்பதும், 2 பேரும் போலீஸ் இல்லை, என்றும் தெரியவந்தது. 2 பேரும் டிரைவர்கள் ஆவார்கள். 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்