நாமக்கல்லில் பெண் சிசு கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தையொட்டி பெண் சிசு கருக்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2019-03-08 22:45 GMT
நாமக்கல்,

இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண் சிசு கருக்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊரக நலப்பணி இணை இயக்குனர் டாக்டர் உஷா தலைமை தாங்கினார்.

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரங்கநாதன், செயலாளர் டாக்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரியில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண் சிசு கருக்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனர்.

இதில் டாக்டர்கள் சீதா, இந்துமதி, ஜெயநந்தினி, குணமணி ஆகியோரும், அரிமா சங்கம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக பெண் சிசு கருக்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்