விக்கிரமங்கலம் அருகே, மின்மாற்றியை சீரமைக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

விக்கிரமங்கலம் அருகே மின்மாற்றியை சீரமைக்ககோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-03-08 22:45 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் மின் தேவைக்காக கீழநத்தம் கிராமத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மின்சாரம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முட்டுவாஞ்சேரி- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன், கிராம நிர்வாக அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், மின்சாரம் இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகிறோம். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் முட்டுவாஞ்சேரி- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்