மார்த்தாண்டம் அருகே பழக்கடையில் மது விற்ற வியாபாரி கைது 82 மதுபாட்டில்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே பழக்கடையில் மது விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-10 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே செம்மங்காலையை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 42). இவர் களுவன்திட்டையில் பழக்கடை நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கும் இவர், பழக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் பழக்கடையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ராஜகோபால் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி தனது பழக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்தார்.

இதனை அறிந்த போலீசார், மது விற்பனை செய்யும் போது ராஜகோபாலை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று அதிகாலையில் பழக்கடை பகுதியில் போலீசார் மறைந்திருந்தனர். அப்போது ராஜகோபால் வழக்கம் போல் கடையை திறந்தார். ஏற்கனவே அங்கு காத்திருந்த மது பிரியர்கள், மதுபாட்டில்களை வாங்கிய வண்ணம் இருந்தனர்.

உடனே போலீசார் அதிரடியாக சென்று ராஜகோபாலை மடக்கினர். மேலும் அங்கிருந்த 82 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பழக்கடையில் மது விற்பனை செய்ததாக வியாபாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்