மதுரவாயலில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப்போராட்டம் 50 பெண்கள் கைது

மதுரவாயலில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-10 23:15 GMT

பூந்தமல்லி,

மதுரவாயல் கணபதி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் அந்த கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் பெண்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 50–க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. வீட்டின் அருகே புதிதாக மதுக்கடை அமைத்தால் குடிமகன்கள் மது குடித்து விட்டு இந்த வழியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள். குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மேலும் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். ஏற்கனவே இந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடை அமைத்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். எதிர்ப்பையும் மீறி கடை திறக்கப்பட்டால் அடித்து நொறுக்குவோம்’ என்று தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றபோது ஒரு பெண்ணின் மகள் கண்ணீர் சிந்தி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்