கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு - திருநாவுக்கரசின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிக்கப் பட்டு உள்ளது. திருநாவுக்கரசின் ஜாமீன் மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடக்கிறது.

Update: 2019-03-11 22:45 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 25). சிவில் என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் முகநூல் (பேஸ்புக்) மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி சபரிராஜன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். இதை நம்பி அந்த மாணவி அங்கு சென்றார்.

அங்கு சபரிராஜன் தனது நண்பர்களான மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் திருநாவுக்கரசு (27). எம்.பி.ஏ. பட்டதாரி. சூளேஸ்வரன்பட்டி மாரியப்பன் என்பவரது மகன் சதீஷ் (28), பக்கோதிபாளையம் தங்கராஜ் என்பவரது மகன் வசந்தகுமார் (24) ஆகியோருடன் காரில் காத்திருந்தார்.

பின்னர் அந்த மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை செல்போனில் படம் பிடித்து 4 பேரும் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் மாணவி பணம் இல்லை என்றதும் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர். அதன்பிறகும் அந்த மாணவியை 4 பேரும் ஆபாச படத்தை காண்பித்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி அந்த மாணவி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 25-ந் தேதி ஜோதி நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருநாவுக்கரசுக்கு சொந்தமான காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருநாவுக்கரசு போலீசில் சிக்காமல் தலைமறைவானார். இதற்கிடையில் கடந்த 5-ந்தேதி தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும், விசாரணையை வருகிற 25-ந் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாபு, செந்தில், ஆச்சிப்பட்டி வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மணிவண்ணனை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்