மதுரை, திருச்சுழியில் விபத்து: தம்பதி உள்பட 4 பேர் பலி

மதுரை மற்றும் திருச்சுழியில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.

Update: 2019-03-11 22:45 GMT
மதுரை,

மதுரை சதாசிவம்நகர், அன்னை அபிராமி தெருவை சேர்ந்தவர் முகமதுகனி(வயது 51). இவருடைய மனைவி பர்வீன் பானு (49). முகமதுகனி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதுநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முகமதுகனியும், பர்வீன் பானுவும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முகமதுகனி பரிதாபமாக இறந்துபோனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பர்வீன்பானுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேர்த்த சிறிது நேரத்திலேயே பர்வீன்பானுவும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார்.

இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் கணேசன் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ரெட்டியபட்டியை அடுத்த மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன் (42), கந்தசாமி(52). இருவரும் விவசாயிகள். கந்தசாமியின் மருமகன் மதுரை பாலமேட்டை சேர்ந்த ராஜேஷ்(22). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திருச்சுழி கத்தாளம்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, ஒரு தொழிற்சாலைக்கு கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, 3 பேர் வந்த மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாமிநாதன் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராஜேஷ் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்