தேர்தல் நடத்தை விதிகள் அமல்: அரசியல் கட்சி விளம்பரம், சின்னம், கொடிகள் அகற்றம்

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னம் ஆகியவையும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

Update: 2019-03-11 21:30 GMT
பேரையூர்,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் 24 மணி நேரத்தில் அரசு கட்டிடங்களில் எழுதப்பட்டு இருக்கும் அரசியல் கட்சிகளின் விளம்பரம், சின்னம் ஆகியவை அழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அரசு கட்டிடங்களில் அரசியல் கட்சிகள் எழுதி வைத்திருந்த கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தட்டி போர்டுகள், பேனர்களும் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளின்படி இந்த சுவர் விளம்பரங்களை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் ஆகியோர் அரசுப்பள்ளிகள், பாலங்கள், குடிநீர் தொட்டிகள், சுற்றுச் சுவர்கள் ஆகிய இடங்களில் வரையப்பட்டு இருந்த அரசியல் கட்சிகள் விளம்பரங்களை அழித்து வருகின்றனர்.

இதேபோல் அரசியல் கட்சிகள் வைத்திருந்த பேனர்கள், தட்டிகள் ஊழியர்களால் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தனியாருக்கு சொந்தமான வீடுகளில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் வரைய வேண்டுமானால், வீட்டின் உரிமையாளர் அனுமதி கடிதம் பெற்று அவற்றுடன் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். இதுதவிர அனுமதி பிரதியை வீட்டு உரிமையாளர் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் பிரிவு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதேபோன்று திருப்பரங்குன்றத்தில் தாசில்தார் நாகராஜன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் கட்சி விளம்பரம், சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்