திருச்சி தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பல்: லட்சக்கணக்கான மதிப்பில் பொருட்கள் சேதம்

திருச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில்பொருட்கள் சேதமடைந்தது. உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2019-03-12 23:00 GMT
திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் குதுப்பாபள்ளம் பகுதியில் ஏராளமான குடிசைகள் உள்ளது. இங்கு பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். நெருக்கமாக அமைந்திருக்கும் இந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.15 மணி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு குடிசையில் எரிந்த தீ மள, மளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதை அறிந்த தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த தீ பரவலாக பரவி பற்றி எரிந்தது. 2 சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மற்ற குடிசைகளில் இருந்த சிலிண்டர்களை எடுத்து வெளியே பாதுகாப்பாக வைத்தனர். இந்த தீயை அணைக்கும் பணி நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் முடிவடைந்தது. தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரி ஒன்றும் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்தில் எரிந்த குடிசைகளை கணக்கெடுத்தனர். இதில் 23 குடிசைகள் சாம்பலானது தெரியவந்தது. தீயில் குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் நாசமானது. இதன் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குடிசை தீக்கிரையானததால் பொருட்கள், உடைமைகளை இழந்து அவர்கள் தவித்து வருகின்றனர். குடிசைகளை இழந்தவர்கள் அந்த பகுதியில் சாலையில் நேற்று காலை சோகத்துடன் அமர்ந்திருந்தனர். தீயில் நாசமான பொருட்களை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க மற்றும் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது சிலர் கண்ணீர் விட்டு கதறி தங்களது நிலையை எடுத்துக்கூறினர். 

மேலும் செய்திகள்