ஓய்வு பெற்ற ஏட்டு வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வடுவூரில் ஓய்வு பெற்ற ஏட்டு வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-13 22:15 GMT
வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் ஜெயபாலன். இவர் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயபாரதி(வயது 52). இவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்கு கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெயபாரதி வடுவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் பேரில் வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்