தேன்கனிக்கோட்டை பிரபல ரவுடி கொலையில் 6 பேர் கைது

தேன்கனிக்கோட்டையில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-13 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே உள்ள மங்கமனப்பாள்யா பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் நசீர் என்பவரை பார்ப்பதற்காக சொகுசு காரில் நேற்று முன்தினம் அவர் வந்தார். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல், தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரபல ரவுடி இஸ்மாயிலை கொலை செய்ததாக பெங்களூரு பொம்மனஹள்ளியை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் சையது இர்சாத் (22), சையது இர்பான் (27), முன்வர் (26), சையது வினாயத் (22), சம்சுதின் (30), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த நசிர் (51) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொம்மனஹள்ளியை சேர்ந்த கவுஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பசிர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இறந்த இஸ்மாயிலும் முக்கிய குற்றவாளி ஆவார். அந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்