கொடைக்கானலில், வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் - நகராட்சி ஆணையரிடம், பொதுமக்கள் மனு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-03-13 23:00 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் போதே விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களையும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அதனை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இததொடர்பாக அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழிபாட்டு தலங்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், விரைவில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். இதனையறிந்த கொடைக்கானல் பொது மக்கள் மற்றும் மும்மதத்தை சேர்ந்தவர்கள், அனைத்து கட்சியினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘கொடைக்கானல் நகரில் பல வழிபாட்டு தலங்கள் முன்னோர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் அனுமதி பெற முடியவில்லை. எனவே தற்போது புதிய முழுமைத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதலின்படி அனுமதிக்கான விண்ணப்பம் செய்து அனுமதி பெறப்படும். அதுவரை வழிபாட்டு தலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறினார். இதே கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கொடைக்கானல் நகருக்கான புதிய மாஸ்டர் பிளான் என்னும் முழுமைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது வரை 237 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நகரில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கும். கொடைக்கானலில் புதிய மாஸ்டர் பிளான் எனும் முழுமைத் திட்டம் குறித்து அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்