அரசியலில் இருந்து முழு ஓய்வு பெறலாம் என்று யோசிக்கிறேன் இனி நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் தேவேகவுடா அறிவிப்பு

அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற்று விடலாம் என்று யோசிக்கிறேன் எனவும், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் தேவேகவுடா கூறினார்.

Update: 2019-03-13 23:03 GMT
ஹாசன்,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் முதல்-மந்திரியாக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வர் இருந்து வருகிறார். மேலும் இக்கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா இருந்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணி தொடருகிறது. ஆனால் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. இதற்கிடையே மண்டியா, ஹாசன் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியினர் பகிரங்கமாக சொல்லி வருகிறார்கள். அதன்படி மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனும், தேவேகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமி போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரஜ்வல் ரேவண்ணா போட்டி

அதேபோல் ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் தேவேகவுடாவின் பேரனும், மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி நேற்று காலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் மூடலஹிட்டே கிராமத்தில் உள்ள, தேவேகவுடாவின் குலதெய்வ கோவிலான சென்னகேசுவரா சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மந்திரி எச்.டி.ரேவண்ணா, எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணா, எச்.கே.குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக தேவேகவுடா பேசும்போது கூறியதாவது:-

அரசியலில் இருந்து ஓய்வு

நான் எந்தவொரு செயலையும் செய்யும் முன்பு கடவுளை வணங்கி விட்டுதான் செய்வேன். அதேபோல்தான் எனது குடும்பத்தினரும் உள்ளனர். இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் எனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். வாக்காளர்கள் அனைவரும் அவருக்கு ஓட்டுப்போட வேண்டும். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது வாக்காளர்களின் கையில் தான் உள்ளது.

நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இனி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன். மேலும் அரசியலில் இருந்து முழு ஓய்வு பெறலாம் என்று யோசித்து வருகிறேன். ஏனெனில் பல அரசியல் தலைவர்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார் கள். அதனால்தான் நான் தேர் தலில் நிற்கும் முடிவை கைவிட்டுள்ளேன். எனவே எனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

தேவேகவுடா கண்கலங்கினார்

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடருகிறது. ஆனால் தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் பேச வேண்டும். ஆனால் அவர் தற்போது தேர்தல் பிரசாரங்களில் இடைவிடாமல் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதனால் அவருடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவை எடுப்போம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். தேவேகவுடா தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு கேட்டபோதும், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியபோதும் கண்கலங்கி அழுதார்.

3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்...

அதேபோல் தேவேகவுடாவை பின்தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ., ‘‘தேவேகவுடா தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்றால், நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் குடும்ப கட்சி இல்லையா?’’ என்று கூறி கண்கலங்கி அழுதார். அப்போது அவரை அங்கிருந்த எச்.டி.ரேவண்ணா தேற்றினார். மேலும் தனது கையில் இருந்த கைக்குட்டையால் பாலகிருஷ்ணாவின் கண்களை துடைத்தார்.

பின்னர் எச்.டி.ரேவண்ணாவும் தனது மகனுக்கு ஓட்டுகேட்டு பேசும்போது அழுதார். இது அங்கிருந்த தொண்டர்கள் பலரையும் கண்கலங்கச் செய்தது. முடிவில் பேசிய எச்.கே.குமாரசாமி எம்.எல்.ஏ., ‘‘ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணாவை சுமார் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்