நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பலி

நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-03-14 23:00 GMT
நொய்யல்,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 27). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்டிரிக்கல் அண்ட் எலக்டிரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ளார். தற்போது துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் துபாயிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து தனது ஊருக்கு நேற்று காலையில் வந்திருந்தார்.

பின்னர் ராமச்சந்திரன் தனது கல்லூரி நண்பரான கரூர் மாவட்டம், வீரராக்கியத்தை சேர்ந்த சின்னுசாமி மகன் மணிகண்டன் (28) என்பவரை பார்க்க சத்திரப்பட்டியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீரராக்கியத்தில் இருந்து ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை ராமச்சந்திரன் ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார்.

இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நொய்யல் புன்னம்சத்திரம் அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து கரூர் நோக்கி வந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்