பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 23:00 GMT
கரூர்,

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு அக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட நிர்வாகி சுரேந்தர் தலைமை தாங்கினார். அப்போது பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பெண் தொழிலாளர்கள், மாணவிகள், பெண் குழந்தைகள் உள்ளிட்டோருடைய பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு, போலீஸ் துறையினர் முன்வர வேண்டும் என மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்