சகோதரர் இறந்ததால் விரக்தி: தாயுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் பிணமாக தொங்கினர்

சகோதரர் இறந்த விரக்தியில், தாயுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூட்டி வீட்டுக்குள் தாய்-மகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

Update: 2019-03-14 22:00 GMT
செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் மாலதி (வயது 45). அங்குள்ள மாவு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மகள் சர்மிளா(22). என்ஜினீயரான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக மாலதியின் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கினர்

அங்கு பூட்டிய வீட்டுக்குள் மாலதியும், சர்மிளாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

வீட்டின் கண்ணாடி ஜன்னலில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீட்டுக்கு கொடுக்கப்பட்ட முன்பணத்தை வாங்கி, எனது அத்தையிடம் கொடுக்கவும்” என சர்மிளா எழுதி வைத்து இருந்ததை போலீசார் கண்டனர்.

பின்னர் தாய்-மகள் இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தற்கொலை

மாலதியின் கணவர் ரமேஷ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்து தனியாக சென்று விட்டார். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்தார். பெங்களூருவில் வேலை செய்து வந்த அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கணவர் ரமேஷ், விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற நிலையில், மகன் ராஜ்குமாரும் தற்கொலை செய்து கொண்டதால் மாலதியும், சகோதரர் இறந்து விட்டதால் சர்மிளாவும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த சர்மிளா, தனது தாய் மாலதியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் தாய்-மகள் இருவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்