பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 22:00 GMT
மதுரை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் சங்கத்தினர் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும். பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியல் தலையீடு இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கென புகார் அளித்திட சிறப்பு போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் பாலியல் வன்முறைகள், புகார் தெரிவிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இதில் மருத்துவக்கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்