தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை ஆன்லைனில் அனுப்பலாம் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலம் அனுப்பலாம் என ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

Update: 2019-03-14 21:30 GMT
ஆரணி, 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிகாரியாக திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி பொறுப்பு வகிக்கிறார். இவரது தலைமையில் ஆரணி தாலுகா அலுவலகத்தில் நேற்று நகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி முன்னிலை வகித்தார். தாசில்தார் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்ட வழங்கல் அலுவலர் மணி, நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், மண்டல துணை தாசில்தார் சத்தியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் தேர்தல் அலுவலர் ரத்தினசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

வாக்கு அளித்தவர்கள் தங்களது வாக்கு பதிவாகி உள்ளதா என 7 வினாடிகள் வரை பார்த்து கொள்ளலாம். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கலாம். அந்த புகார்களுக்கான பதில்கள் அவர்களுக்கு அனுப்பப்படும்.

மேலும் கட்டணமில்லா தொலைபேசியான 1950 என்ற எண்ணுக்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலரை 18004253689 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம். பணப் பரிமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தால் அந்தந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் வருவார்கள்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ந் தேதி சித்ரா பவுர்ணமி விழாவன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலன்று ஆரணி, திருவண்ணாமலை தொகுதிகளில் வாக்குகள் பதிவாகும் மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை சண்முகா கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கு மாற்றுப் பாதை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் இன்னும் சில இடங்களில் அழிக்கப்படாமல் உள்ளது. அதனை மறைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர்களின் வருகையின்போது 100 அடி வரைதான் கொடிகள் கட்ட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்