வாக்களிக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்

வாக்களிக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

Update: 2019-03-15 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம், காந்தி ரோடு, பூந்தோட்டம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பஸ், ஆட்டோக்களில் வாக்களிப்போம், ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, பஸ் பயணிகளிடம் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தவறாது வாக்களியுங்கள், வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, உங்கள் வாக்கு உங்கள் உரிமை, கண்ணியத்துடன் சிந்தித்து தவறாது வாக்களியுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு, பூந்தோட்டம் பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, அவசியம் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, தாசில்தார்கள் மிருணாளினி, மதுசெழியன், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்