கொடுங்கையூரில் வீட்டில் பதுக்கிய 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி

கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிய 40 மூட்டை ரேஷன் அரிசியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-15 21:14 GMT
பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் ராஜரத்னம் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே தேர்தல் பாதுகாப்பு அதிகாரி பழனி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை குப்பை கிடங்கு எதிரே சிலர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.

40 மூட்டை ரேஷன் அரிசி

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கொடுங்கையூர் போலீசார் உதவியோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை அண்ணாநகரில் உள்ள அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளை இந்த வீட்டில் பதுக்கியது யார்? எனவும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்லும் கும்பல் பதுக்கிவைத்தனரா? அல்லது ஏதேனும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரிசி மூட்டைகளை வைத்துஇருந்தனரா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்