பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மறியல், சமூக அமைப்புகளை சேர்ந்த 85 பேர் கைது

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சமூக அமைப்புகளை சேர்ந்த 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-15 23:04 GMT
புதுச்சேரி, 

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

மேலும் இதுதொடர்பான விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரி பெயர் இடம்பெற்றுள்ளதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அரசாணை நகலை எரிக்கப்போவதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி திராவிடர் கழகத்தினர் நேற்று காமராஜர் சிலை அருகே கூடினார்கள். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர் உள்பட பல்வேறு சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசின் அரசாணையை தீயிட்டு எரித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஹேமலதா, ஆனந்தவள்ளி, சரளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுவை தாகூர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்