புதுச்சேரி கடற்கரையில், ரேடியோ போன்ற கருவியுடன் வலம் வந்த சுற்றுலா பயணிகள்

புதுவைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அவ்வாறு சுற்றுலா வருபவர்கள் வழிகாட்டி ஒருவர் உதவியுடன் புதுவையை சுற்றி பார்ப்பது வழக்கம்.

Update: 2019-03-15 23:04 GMT
புதுச்சேரி,

ஒருசிலர் சுற்றுலா வழிகாட்டியுடன் வந்தால் அவர்களை அந்த வழிகாட்டி எளிதாக ஒருகிணைத்து புதுவையை பற்றி தெளிவாக விளக்க முடியும். ஆனால் 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா வரும்போது அவர்களை ஒருகிணைத்து செல்வது கஷ்டமாகும். மேலும் புதுவையின் சிறப்புகளை பற்றி சத்தமாக சொல்லி விளக்குவதும் சற்று சிரமமான விஷயமாகும்.

இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று புதுவை கடற்கரையில் பிரான்சு நாட்டை சேர்ந்த சுமார் 30 பேர் சிறிய ரேடியோ போன்ற ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டபடி சுற்றிவந்தனர். அந்த ரேடியோ போன்ற அமைப்பில் இருந்து அடிக்கடி புதுவையை பற்றிய விளக்கமும் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.

வாக்கி டாக்கி போன்ற வடிவத்தில் இருந்ததை கூர்ந்து கவனித்தபோதுதான் அது ஹியரிங் டிவேஸ் (பிறர் பேசுவதை கேட்கும் கருவி) என்பது தெரியவந்தது. அவர்கள் பிரான்சிலிருந்து வரும்போதே அந்த கருவியை கொண்டுவந்துள்ளனர்.

இந்த கருவி தொடர்பாக அவர்களுடன் வந்த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சுற்றுலா வழிகாட்டியான சார்லஸ் கூறியதாவது:-

இந்த கருவியானது இந்தியாவில் டெல்லியில் பெரும்பாலான சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 50 சதுரமீட்டர் சுற்றளவில் உள்ள சுற்றுலா பயணிகளை நாம் தொடர்பு கொள்ள முடியும். கூட்ட நெரிசல் மிகுந்த சுற்றுலா தலங்களில் இதை பயன்படுத்துவதால் சுற்றுலா பயணிகள் வழிதவறி செல்வதை தடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி ஓரிடத்தின் சிறப்பினை பற்றி நாம் சொல்வதை அனைவரும் தெளிவாக அவர்கள் வசம் உள்ள கருவியின் மூலம் கேட்டுக்கொள்ளலாம். வெளிநாடுகளில் இதுபோன்ற கருவிகள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இந்த கருவியை கொடுத்தனுப்புகின்றனர்.

தற்போது வந்துள்ள இவர்கள் கத்தோலிக்க ஆலயங்களை காண வந்துள்ளனர். அவர்கள் சென்னை, கோவாவுக்கு செல்ல உள்ளனர்.

இவ்வாறு சார்லஸ் கூறினார்.

மேலும் செய்திகள்