பண்ருட்டி அருகே பரபரப்பு, டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-15 23:00 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த ராசாபாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக புதுப்பேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். விற்பனையாளர்களாக மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த ராஜா(42), வெள்ளக்கரை ஆனந்தமுருகன்(43), கெங்கராயனூர் குழந்தைவேல்(49) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

வழக்கமாக கடையில் வசூலாகும் பணத்தை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றுவிடுவார். அதேபோன்று, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, அன்றைய தினம் வசூலான ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து ராதாகிருஷ்ணன் ஒருமோட்டார் சைக்கிளில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றுவிட்டார்.

அவரை தொடர்ந்து ராஜா, ஆனந்த முருகன், குழந்தைவேல் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டிற்கு சென்றனர். அப்போது ராசாபாளையத்தில் உள்ள கட்டமுத்துப்பாளையம் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இதில் ராஜா மட்டும் முன்னால் சென்றுவிட்டார். அவரை பின்தொடர்ந்து மற்ற 2 பேரும் வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஆனந்தமுருகன், குழந்தைவேலு ஆகியோரை ஆகியோரை வழிமறித்தது.

உடன் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள், 2 பேரிடமும் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை கொடுக்குமாறும், இல்லையெனில் கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டினர்.

அதற்கு அவர்கள், தங்களிடம் டாஸ்மாக் கடையில் வசூலான பணம் எதுவும் இல்லை என்று கூறினர். இதை நம்பாத அந்த கும்பல், ஆனந்த முருகன், குழந்தை வேல் ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். தொடர்ந்து அவர்களது சட்டை பையில் இருந்த ரூ.350 பணத்தை மட்டும் பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது. இதை பார்த்த அக்கம்பக்கக்தினர் ஓடி வந்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணத்தை கொண்டு சென்றதால், கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 4 ஆயிரம் பணம் தப்பியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்