அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவின தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவின தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

Update: 2019-03-16 21:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தொடர்பான தொகை நிர்ணயம் செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) வெங்கட்ராமன் வரவேற்றார்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒலி பெருக்கி, மைக், மேடை, பந்தல், பேனர், கொடி, துண்டு பிரசுரம், போஸ்டர், சுவர் விளம்பரம், டிஜிட்டல் பேனர், வளைவுகள், வாகனங்கள், இருக்கைகள், மின் அலங்காரம், ஜெனரேட்டர், விளக்குகள், டீ சர்ட், மேளம், உணவு வகைகள் ஆகியவை குறித்து செலவினம் தொகை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாடு மற்றும் வாக்குப்பதிவின் போது மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்