உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

பொறையாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-17 23:00 GMT
பொறையாறு,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைப்போல

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள திருவிளையாட்டம் பகுதியில் நேற்று தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு தாசில்தார் முருகேசன் தலைமையில் ஏட்டு அழகேசன், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில் வழியாக காரைக்கால் நோக்கி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் டேங் கவரில் ரூ.2 லட்சத்து 69ஆயிரத்து 900 இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லை. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன்(வயது32) என்று தெரியவந்தது. மேலும் அவர் அந்த பணத்தை காரைக்காலுக்கு கட்டிட பணிக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2லட்சத்து 69 ஆயிரத்து 900-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த பணம் இன்று(திங்கட்கிழமை) கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்