முக்கிய சாலைகள் தவிர தெருக்களிலும் வாகன சோதனை நடத்த வேண்டும் உதவி கலெக்டர் அறிவுறுத்தல்

முக்கிய சாலைகள் தவிர தெருக்களிலும் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று, கும்பகோணத்தில் உதவி கலெக்டர் கூறினார்.

Update: 2019-03-20 22:45 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் வீராச்சாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் கணக்கு பிரிவு நேர்முக உதவியாளர் விஜயலெட்சுமி, மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கோபு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஏழுமலை மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், கண்காணிப்பு குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவினங் களுக்கான பார்வையாளர் சதீஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் செய்யும் செலவினங்கள், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், அதே கட்சியினர் அல்லது கூட்டணி கட்சியினர் செய்யும் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி செலவு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து உதவி கலெக்டர் வீராச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யவேண்டிய பணிகளை கவனத்துடன் செய்ய வேண்டும். வாகனங்களை சோதனை செய்யும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. வாகன சோதனையில் ஈடுபடும் பெரும்பாலான அதிகாரிகள் நகரின் முக்கிய சாலைகளில் மட்டுமே ஈடுபடுவதாக தெரிகிறது. ஆனால் நகரில் உள்ள பல குறுக்கு தெருக்களின் வழியே பணம் எடுத்துசெல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றது.

நகரின் உட்பகுதியில் உள்ள தெருக்களிலும் வாகன சோதனை நடத்த வேண்டும். மேலும் கார் போன்ற வாகனங்களில் இல்லாமல் சிறிய மொபட்டுகளிலேயே பணம் கொண்டுசெல்லப்படுவதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு செய்ய வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணம், பொருட்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

லாரிகளில் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை சோதனை செய்து கொள் முதல் செய்த இடம், இறக்க வேண்டிய இடம் குறித்த ஆவணங்கள் உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்