திருநின்றவூர், பட்டாபிராம் பகுதியில் வழிப்பறி கொள்ளையன் கைது

திருநின்றவூர், பட்டாபிராம் பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-03-20 23:00 GMT

ஆவடி,

ஆவடியில் உள்ள பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொள்ளை நடந்து வந்தன. இதையடுத்து துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் நடந்து வந்த லத்தீப் (வயது 37) என்பவரை வழிமறித்து மர்ம நபர் ஒருவர் ரூ.1,500–ஐ பறித்து கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து அவர் திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது லட்சுமிபுரம் அருகே சந்தேகப்படும்படியாக திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரை சேர்ந்த குமார் என்ற குள்ள குமார் (41) என்பது தெரியவந்தது. அவர் லத்தீப்பிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது.

மேலும் பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததும், இவர் மீது பள்ளிக்கரணை, சேலையூர், ஆதம்பாக்கம், உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவரிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்