காஞ்சிலிக்கொட்டாய் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிலிக்கொட்டாயில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-03-21 22:30 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள காஞ்சிலிக்கொட்டாய் கிராமத்தில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்வ விநாயகர், இடும்பன், கடம்பன், மலையாள கருப்பு, முனியனார், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 13-ந் தேதி கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மண்டக படி மற்றும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதனையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து பால தண்டாயுதபாணி சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக தேருக்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் வி.கைகாட்டி- ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.

ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தையில் வள்ளிதேவசேனா சமேத அழகு சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தேவதா, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டிமடம் காட்டுகேணி குளக்கரையில் வேல், காவடிகளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பக்தர்கள் அவர் அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேல் காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும், சிலர் அலகு குத்திக்கொண்டும் பக்தி முழக்கத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து வள்ளிதேவசேனா அழகுசுப்ரமணியர் சுவாமிக்கு 1,008 சங்கு, 108 கலச பூஜைகள், ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இடும்பன், கடம்பன் பூஜை மற்றும் தீபாராதனையுடன் திருவிழா நிறைவுற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்