வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள், நாட்டு வெடிகள் பறிமுதல் வியாபாரி கைது

எஸ்.வாழவந்தியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள், நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-21 22:45 GMT
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருள்அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் எஸ்.வாழவந்தி கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது42) என்பவர் வீட்டில் பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி கிராமத்தில் இருந்து பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பு இன்றியும் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பதுக்கி வைத்து இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு, தோரண வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்