திருப்பூரில் இருந்து தேனிக்கு காரில் சென்ற பனியன் நிறுவன ஊழியர்களிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் - பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் இருந்து தேனிக்கு காரில் சென்ற பனியன் நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-21 22:29 GMT
தாராபுரம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், வாகனங்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல நேர்ந்தால், அதற்கான தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணம் எதுவுமின்றி கொண்டு செல்லும் பணத்தை கண்காணித்து, அதை பறிமுதல் செய்வதற்காக தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் தாராபுரம் பகுதியில் இரவு, பகலாக வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை தாராபுரம் புறவழிச்சாலையில் புதிய அமராவதி ஆற்றுப்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி சுப்பிரமணி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த, திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் சுகந்த பிரியதர்ஷன் மற்றும் சிலரை அதிகாரிகள் சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 500 கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணையில் திருப்பூரில் உள்ள சக்தி நிட்டிங் கம்பெனியின் நிறுவனம் தேனியில் செயல்படுவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டதால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான ரவிச்சந்திரனிடம் வழங்கினார்கள். அதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்