திருவண்ணாமலையில் மலேசிய சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.3¾ லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலையில் மலேசிய சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-22 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை-திண்டிவனம் ரிங்ரோடு அருகில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 சுற்றுலா வேன் வந்தது. அதில் மலேசியாவில் இருந்து ஆன்மிக சுற்றுலாவிற்கு வந்த 2 குழுவினர் இருந்தனர். ஒரு வேனில் 6 பெண்கள் உள்பட 12 பேரும், மற்றொரு வேனில் 6 பெண்கள் உள்பட 8 பேரும் இருந்தனர். இந்த சுற்றுலா வேன்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

ஒரு வேனில் இருந்த சத்தியபிரியா என்பவரிடம் ரூ.3 லட்சமும், மற்றொரு வேனில் இருந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.70 ஆயிரமும் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பதால் இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணைக்காக திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை அங்கு வந்து தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரும் தேவைக்கு மீறி பணம் வைத்திருக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பின் நாளை (அதாவது இன்று) அவர்களிடம் பணத்தை ஒப்படைத்து விடுங்கள் என்றார்.

இதனால் சிறிது நேரம் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் மலேசிய சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்