சாலையில் தேங்கும் அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் பொருட்கள் சாலையில் தேங்கி நிற்கும் நிலை உள்ளதால் அதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-22 22:27 GMT

விருதுநகர்,

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் பொருட்கள் சாலையில் தேங்கி நிற்கும் நிலையில் இதனை அகற்றுவதற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து பாதாள சாக்கடை பிரதான குழாய்களுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகமும், அதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.

இந்தநிலையில் கழிவுநீர் குழாயை பாதாள சாக்கடையின் பிரதான குழாயுடன் இணைப்பதற்கு நெடுஞ்சாலையை கடந்து குழாயை கொண்டு செல்வதற்கு விதிமுறைப்படி அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சாலையில் தரம் உயர்த்தப்பட்டதால் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறது.

இதனால் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவநீர் மற்றும் பொருட்கள் சாலையின் ஓரத்திலேயே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதன்காரணமாக அருகில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கு, குடியிருப்பு பகுதிகளுக்கு சுகாதார கேட்டால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறையுடன் கலந்து ஆலோசனை செய்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஆகும் பட்சத்தில் அந்த பகுதிலேயே நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகிவிடும்.

மேலும் செய்திகள்