சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை: ரூ.2 லட்சம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ரூ.2 லட்சம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-03-23 00:34 GMT
சேலம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் பணம், மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி பறக்கும் படை அதிகாரி பாலுமகேந்திரன் தலைமையில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் கோட்டையை சேர்ந்த அப்துல் மாலிக் என்று தெரிந்தது. அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கொலுசு உள்ளிட்ட 5 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து 5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சாரதாவிடம் ஒப்படைத்தனர்.

இதே போன்று முத்துநாயக்கன்பட்டி சுடுகாடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்கரவர்த்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேனில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த லோகநாதன், ரங்கநாதன் என்றும் அவர்கள் மாட்டு வியாபாரிகள் என்றும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்