ஏகலைவா பள்ளியில் சேர பழங்குடியின மாணவ – மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

ஏலகிரிமலையில் இயங்கி வரும் ஏகலைவா பள்ளியில் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே, பழங்குடியின மாணவ – மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-24 15:04 GMT

வேலூர், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேலூர் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பழங்குடியின மாணவி – மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஏலகிரிமலையில் அத்தனாவூர் பகுதியில் (தற்காலிகமாக) ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டுக்கு 400 மாணவர்கள் சேர்க்கைக்கு சென்னை பழங்குடியினர் நல இயக்குனர் அலுவலரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்–1 வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே, 6–ம் வகுப்பு பிளஸ்–1 வரை மாணவ – மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் முற்றிலும் பழங்குடியின மாணவ – மாணவிகள் மட்டுமே தகுதித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி பயில அனுமதிக்கப்படுவர். இப்பள்ளியில் அனுமதிக்கப்படும் அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் தரமான கல்வி, உணவு, உறைவிடம், சீருடை, கல்வி உபகரணங்கள் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்குரிய செலவினங்களை அரசே முழுப்பொறுப்பேற்கும். இப்பள்ளியில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் கல்வி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் வழங்கப்படும்.

இப்பள்ளியில் பழங்குடியின மாணவ – மாணவிகளை 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–1 வகுப்பு வரை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதிச்சான்று, பெற்றோரின் ஆதார், இருப்பிடச்சான்று மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட பழங்குடி, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின்ரோடு தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) வளாகம், ஏலகிரிமலை அத்தனாவூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய முகவரிகளில் நேரில் சென்று சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்