ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டி நாய் என நினைத்து விரட்டிய பொதுமக்கள்

ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டியை பொதுமக்கள் நாய் என நினைத்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-24 22:30 GMT
பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுத்தை, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் தண்ணீர் தேடி சிறுத்தை குட்டி ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய் குட்டி என நினைத்து விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் அருகில் சென்று பார்த்த போது அது நாய் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சிறுத்தை குட்டி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மீண்டும் அப்பகுதிக்கு சிறுத்தைகள் வந்து விடக்கூடும் என்பதால் அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கல் நீரேற்று நிலையத்திற்குள் சிறுத்தை குட்டி புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்