பந்திப்பூர் வனப்பகுதியில் மீண்டும் தீ: 8 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம்

பந்திப்பூர் வனப்பகுதியில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில், 8 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின.

Update: 2019-03-24 21:45 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ளது பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயம். இந்த சரணாலயத்திற்கு உட்பட்ட 13 வனசரக பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் தமிழ்நாடு முதுமலை, கேரள மாநில எல்லை வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் தீ பிடித்து எரிந்தது. 4 நாட்கள் தொடர்ந்து எரிந்த தீயில் 10 ஆயிரம் ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. இதனை தொடர்ந்து வனப்பகுதிக்கு தீ வைத்ததாக கூறி 3 பேரை வனத்துறையினர் கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு உட்பட்ட குந்தகெரே வனப்பகுதியில் திடீரென திப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று வனப்பகுதியில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் 8 ஏக்கரில் மரம், செடி, கொடிகள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பந்திப்பூர் வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு செடி, மரம், கொடிகள் எரிந்து நாசமாகி போவது வனஆர்வலர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வனப்பகுதியில் தீ பற்றி எரிவதை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்