வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கலெக்டர் சாந்தா ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களின் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

Update: 2019-03-24 22:30 GMT
பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களின் முதற்கட்ட பயிற்சி வகுப்பு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சாந்தா கூறுகையில், தேர்தலில் எந்த விதமான பாரபட்சமும் இன்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். மேலும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடி முதல் நிலை அலுவலர்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இயக்குவது தொடர்பாகவும், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது போன்ற அடிப்படையான பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பொறுப்பு மற்றும் கடமை பற்றியும், தேர்தலின் போது அனைத்து அலுவலர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெயினுலாப்தீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்