மருந்துவாழ்மலையில் தியானம் செய்த போது போலீஸ் ஏட்டு திடீர் சாவு

நாகர்கோவில் அருகே மருந்துவாழ் மலையில் தியானம் செய்த போது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2019-03-24 23:00 GMT
கன்னியாகுமரி,

இரணியல் ஆளூர் பகுதியை சேர்ந்தவர் நாககுமார் (வயது 48), கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவில் அருகே உள்ள மருந்துவாழ் மலைக்கு சென்று அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தியானம் செய்வது வழக்கம். இதே போல நேற்று காலையும் மருந்துவாழ் மலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் மருந்துவாழ் மலை அதிக உயரம் கொண்டது என்பதால் மயங்கி விழுந்த போலீஸ் ஏட்டு நாககுமாரை மேலிருந்து கீழே கொண்டு வர சற்று நேரம் ஆகிவிட்டது.

பின்னர் அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது நாககுமார் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக போலீஸ் ஏட்டு நாககுமார் இறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்