பொள்ளாச்சியை தொடர்ந்து சேலத்தில் அதிர்ச்சி சம்பவம், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 4 வாலிபர்கள் கைது - 44 பவுன் நகை மீட்பு, செல்போன்கள் பறிமுதல்

பொள்ளாச்சியை தொடர்ந்து சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 44 பவுன் நகை மீட்கப்பட்டதுடன், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-03-26 23:15 GMT
கொண்டலாம்பட்டி,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா எதிர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தர் (வயது 25). என்ஜினீயரிங் முடித்து விட்டு அரசு வேலைக்காக தற்போது படித்து வருகிறார். இவருடைய அண்ணியின் தங்கை பவித்ரா (23), பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி அவருடைய அக்காவை பார்க்க மோகனசுந்தர் வீட்டிற்கு வந்தார். பின்னர் மோகனசுந்தர் இரவு 10 மணிக்கு மேல் மோட்டார்சைக்கிளில் பவித்ராவை ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

வழியில் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் நெய்காரப்பட்டி இறக்கம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென மோகனசுந்தர், பவித்ரா ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4½ பவுன் நகையை பறித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி பஸ்நிறுத்த பகுதியில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்தனர். அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), தினேஷ் (26), இளங்கோவன் (28), சுபாஷ் (27) ஆகியோர் என்பதும், மோகனசுந்தர், பவித்ரா ஆகியோரிடம் நகையை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சேலம், கோவை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் வழியாக செல்லலாம். இந்த பாலத்தையொட்டி புதர் பகுதி உள்ளது. அந்த வழியாக தியேட்டரில் இரவு காட்சி பார்த்துவிட்டு வருபவர்கள், காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்கள் என மோட்டார் சைக்கிளில் ஜோடியாக வருபவர்களை பட்டர்பிளை மேம்பாலத்தில் இவர்கள் 4 பேரும் வழிமறித்து, கத்தி முனையில் நகைகளை பறித்து உள்ளனர்.

மேலும் கத்தியை காட்டி மிரட்டி பெண்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் அதனை காட்டி பாலியல் தொல்லை கொடுப்பது, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதியான பெண்கள் நகை, பணத்தை அதிக அளவில் இழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து எந்தவிதமான புகாரும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த உண்மையை அறிய ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன், தினேஷ், இளங்கோவன், சுபாஷ் ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 44 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து சேலத்திலும் பாலியல் சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

மேலும் செய்திகள்