கூடுவாஞ்சேரி அருகே கிணற்றில் தனியார் நிறுவன ஊழியர் பிணம்

கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

Update: 2019-03-29 22:15 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள வள்ளி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ (வயது58), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் நேற்றுமுன்தினம் மதியம் அவரது வீட்டிலிருந்து மொபட்டில் வெளியே சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த உறவினர்கள் இளங்கோவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நந்திவரம் பங்கஜம் அம்மாள் நகர் அருகே உள்ள திறந்தவெளி கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் இறந்த நபர் காணாமல் போன இளங்கோ என்பது தெரியவந்தது. இளங்கோவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்