கொல்லிமலையில் 2-வது நாளாக காட்டுத்தீ சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கொல்லிமலையில் 2-வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-03-29 22:45 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலையில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் செடி, கொடி, மரங்கள் காய்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்த சருகுகள் எளிதில் தீப்பற்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. மேலும் மலைப்பகுதியில் சுற்றிதிரியும் சில மர்ம ஆசாமிகள் அலட்சியமாக போட்டு செல்லும் பீடி, சிகரெட் துண்டுகள் போன்றவற்றாலும் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொல்லிமலையில் காட்டுத்தீ எரிந்து, காற்றின் வேகத்தால் மலைப்பகுதியில் இருந்து மளமளவென அடிவார பகுதி வரை தீ பரவி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த வாழை, பாக்கு, மா மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த சில குடிசை வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தன. மலைப்பகுதியில் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயின் காரணமாக கொல்லிமலை பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதற்கிடையில் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், மாவட்ட வனஅலுவலர் காஞ்சனா, உதவி கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். மலைப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் கொல்லிமலைக்கு தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் மலைப்பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையினர் அடிவார பகுதியில் நின்று சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்