காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் 35 தேக்கு மர நாற்காலிகள் பறிமுதல்

காலாப்பட்டு பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது 35 தேக்கு மர நாற்காலிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-30 22:47 GMT
காலாப்பட்டு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்ட எல்லைகளில் பறக்கும் படை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு கனகசெட்டிகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு லாரியை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட 35 நாற்காலிகள் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். ஆனால் அவற்றை கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

லாரி டிரைவர் சாந்தகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோட்டக்குப்பத்தில் இருந்து நாற்காலிகள் தயார் செய்து மரக்காணத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த நாற்காலிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை வணிக வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்