மாயமான முகிலன் மீது பட்டதாரி பெண் பாலியல் புகார் பரபரப்பு தகவல்கள்

மாயமான முகிலன் மீது பட்டதாரி பெண் பாலியல் புகார் அளித்தார். இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-03-31 23:15 GMT
குளித்தலை,

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். இவர் சூழலியல், மனித உரிமைப்போராளி ஆவார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது பற்றி, கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரம் வெளியிட்டு பேட்டி அளித்த அவர், திடீரென மாயம் ஆனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி பூங்கொடி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்

அதைத் தொடர்ந்து அவர் மாயம் ஆனது தொடர்பாக சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி போலீசார் தேடுகின்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக முகிலனுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று வந்த பட்டதாரி பெண், கரூர் மாவட்டம், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

முகிலன் மேற்கொண்டு வந்த சமூக பணிகளால் ஈர்க்கப்பட்டு, அவரது இயக்கத்தில் சேர்ந்து நானும் சேவை பணியினை மேற்கொண்டேன். கடந்த 26-2-2017 அன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன்.

பின்னர் 27-2-2017 அன்று நெடுவாசல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு காம்பளக்சில் இரண்டு பேரும் தங்கினோம். அப்போது முகிலன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபோன்று பலமுறை நடந்து உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், முகிலன் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முகிலன் மாயமான நிலையில், அவரோடு போராட்டங்களில் பங்கேற்ற பெண் அவர் மீது பாலியல் புகார் எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்