திருவண்ணாமலை அருகே கிணற்றில் கண்டக்டர் பிணம் சாவில் மர்மம் உள்ளதாக மனைவி போலீசில் புகார்
திருவண்ணாமலை அருகே கிணற்றில் கண்டக்டர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவரது மனைவி ரேகா (27). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ரவிக்குமார் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 30-ந் தேதி வேலை முடிந்தவுடன் அவர் நாயுடுமங்கலத்தில் உள்ள ஒரு கடையில் சுவீட் வாங்கி, அதை தன்னுடன் வேலை பார்க்கும் டிரைவரிடம் தனது வீட்டில் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பினார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
ரவிக்குமார் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த ரேகா, அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது ரவிக்குமாரின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை அருகில் உள்ள பழையமண்ணை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் கிடந்த பிணத்தை வெளியில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்தது ரவிக்குமார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரேகாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் ரேகா தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.