மருதாநதி அணையில் மணல் அள்ளும் கும்பல்

மருதாநதி அணையில் மணல் அள்ளும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

Update: 2019-04-01 22:45 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணை 74 அடி உயரம் கொண்டதாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 179 ஏக்கர். தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் அணை வறண்டு காணப்படுகிறது. இந்தநிலையில் மருதாநதி அணையின் உட்பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் டிராக்டர்களில் மணல் அள்ளி செல்கின்றனர். இதனை பொதுப் பணித்துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. மணல் அள்ளுவோரை தட்டிக்கேட்டால், அவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

இது தொடர்பாக முதல்- அமைச்சர், மாவட்ட கலெக் டர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி மருதாநதி அணையை சுற்றியுள்ள நொச்சி ஓடை, சின்ன ஓடை, புலியூத்து ஓடை, பூசாரி ஓடை, சிவக்காட்டு ஓடை, முத்துப்பேச்சி ஓடை, எருக்காட்டு ஓடை, வறட்டாறு ஓடை உள்பட 25-க்கும் மேற்பட்ட ஓடைகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக மணல் அள்ளி வருகின்றனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, மருதாநதி அணை மற்றும் ஓடைகளில் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையம், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாய்த்துறை, போலீசார் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மணல் அள்ளுவதை தடுக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்