பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: உதவி பேராசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கரூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நீதிமன்றத்தில் மாணவ-மாணவிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-01 22:15 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பொருளாதார துறை தலைவரும், உதவி பேராசிரியருமான இளங்கோவனை (வயது 53) கரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி விசாரித்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் நீதிபதி முன்பு ஆஜராகி, தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து எடுத்து கூறி வாக்கு மூலம் அளித்தனர். இதற்கிடையே ஜாமீன் மனு விசாரணை மீதான தன்மையை அறிவதற்காக அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் அங்குபாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடிய போது, தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் பெருகி வருவதால் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. அதன் அடிப்படையில் கல்லூரியில் நீண்ட நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளங்கோவனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார். குற்றவாளி தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இளங்கோவனுடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையறிந்த மாணவ, மாணவிகள் நீதிமன்ற வளாகத்தை விட்டு அமைதியாக கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்