காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முரண்பாடானது தம்பிதுரை பேட்டி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முரண்பாடாக உள்ளது என தம்பிதுரை கூறினார்.

Update: 2019-04-03 23:00 GMT
அன்னவாசல்,


கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர், பெருமாநாடு, கீழப்பழுவஞ்சி, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயனுள்ள எந்த சிறப்பம்சங்களும் இல்லை. மாநில கல்வி கொள்கை நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட திட்டங்களை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் தற்போது அதிலிருந்து மாற்றம் கொண்டு வருவதாக அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முரண்பாடானது, அவர்கள் வெற்றி பெற்றால் தானே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியும். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி பெற முடியாது என தெரிந்துதான் கேரளாவிலும் போட்டியிடுகிறார்.


தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வின் தேர்தல் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்கிறீர்கள், அவருடைய கட்சிக்கு அவர் பிரசாரம் செய்கிறார். அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். ராகுல் காந்தி பிரதமர் ஆவதை தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை. இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கை தான் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததும் தி.மு.க., காங்கிரஸ் தான். அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருப்பதற்கு கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீரை பெறுவதற்காகவே தான். பா.ஜ.க.வால் மட்டுமே காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காது. காவிரியில் நீர் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பா.ஜ.க., அ.தி.மு.க. இணக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்